வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வருவதற்கு அனுமதி நெல்லை, தென்காசி தொகுதிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பேட்டி

நெல்லை, தென்காசி தொகுதிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

Update: 2019-03-18 23:30 GMT
நெல்லை, 

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு கலெக்டர் தேர்தல் அலுவலராகவும், தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு நான்(மாவட்ட வருவாய் அலுவலர்) தேர்தல் அலுவலராகவும் உள்ளோம். நெல்லை தொகுதிக்கு கலெக்டரிடமும், நெல்லை உதவி கலெக்டரிடமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தென்காசி தொகுதிக்கு என்னிடமும்(மாவட்ட வருவாய் அலுவலர்), தென்காசி உதவி கலெக்டரிடமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கும். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கும்.

வேட்பு மனு தாக்கல் 19-ந்தேதி(அதாவது இன்று செவ்வாய்க்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது. 27-ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், மனுவை திரும்ப பெற 29-ந்தேதி கடைசிநாளாகும். வேட்பு மனு தாக்கல் செய்கின்ற வேட்பாளர்கள் பொதுபிரிவினர் ரூ.25 ஆயிரமும், ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.12 ஆயிரத்து 500-ம் டெபாசிட் தொகை செலுத்தவேண்டும். டெபாசிட் தொகையை பணமாகதான் செலுத்தவேண்டும். வேட்பு மனு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது படிவம் எண் 2 ஏ, திருத்திய படிவம் எண் 26 ஆகியவற்றையும் தாக்கல் செய்யவேண்டும். படிவம் எண் 26-ஐ கவனமாக பூர்த்தி செய்யவேண்டும் அனைத்து பகுதியும் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கவேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யாமல் விடுதல் இருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

அபிடவிட், வேட்பு மனு தாக்கல் செய்த அன்று மாலை 3 மணிக்குள் வழங்கவேண்டும். அதில் அவர்களுடைய விவரம், குற்ற வழக்கு, தண்டனை விபரம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும். குற்ற வழக்கு மற்றும் தண்டனை பெற்று இருந்தால் அந்த விவரத்தை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும். பத்திரிகை, தொலைகாட்சியில் 3 முறை விளம்பரம் செய்யவேண்டும். அரசியல் கட்சிக்கும் அந்த விபரத்தை தெரிவிக்கவேண்டும். தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இந்த தகவலை தெரிவிப்பார்.

தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தூரத்திற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய வருகின்ற வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வேட்பு மனுவை நாடாளுமன்ற தொகுதியில் பெயர் உள்ள ஒருவர் மட்டும் முன்மொழிவு செய்யவேண்டும். சுயேட்சை வேட்பாளருக்கு 10 பேர் முன்மொழிவு செய்யவேண்டும். முன்மொழிபவர்களின் பெயர், முகவரி, கையொப்பம் போன்ற அனைத்து விவரங்களும் இருக்கவேண்டும்.

ஒருவர் அதிகப்பட்சமாக 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். தேர்தல் செலவு பார்வையாளர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க ராஜாகோஸ் என்பவரும், ஆலங்குளம், நெல்லை, அம்பை ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க ஏ.பி.மணி என்பவரும், சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க கபில் மண்டல் என்பவரும், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க சீல் ஆசிஸ் என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் நடந்த வாகன சோதனையில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.96 லட்சத்து 7 ஆயிரத்து 900 பிடிப்பட்டுள்ளது. ராதாபுரத்தில் பிடிப்பட்ட ரூ.70 ஆயிரத்திற்கு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த பணம் விடுவிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலால் உதவி ஆணையாளர் பழனிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார்(பொது), சாந்தி(தேர்தல்), தேர்தல் தாசில்தார் புகாரி, சிரஸ்தார் சிவகுமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்