கேரளாவுக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பீகார் வாலிபர் கைது

கேரளாவுக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-03-17 23:57 GMT
திருப்பூர், 

பீகார் மாநிலம் பஞ்சாரியாவை சேர்ந்தவர் முகமது அக்தர்(வயது 25). இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் கோல்டன் நகரில் தங்கியிருந்து அங்கேரிப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தனியாக சுற்றி வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, பனியன் நிறுவனத்துக்கு சென்ற அந்த சிறுமி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவருடைய தாயார் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த சிறுமியை முகமது அக்தர் கேரளாவுக்கு கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் முகமது அக்தர் அந்த சிறுமியை 2 நாட்களுக்கு முன்பு கோவையில் விட்டு விட்டு சென்று விட்டார். அங்கிருந்து சிறுமியை மீட்டு விசாரித்தபோது, முகமது அக்தர் அந்த சிறுமியை கடத்திக்கொண்டு கேரளா மாநிலத்தில் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்ததுடன் தனிமையிலும் இருவர் தங்கியுள்ளது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் இதுகுறித்து விசாரணை நடத்தி முகமது அக்தரை நேற்று பிடித்தார். விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் முகமது அக்தர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்