சாலை தடுப்பில் கார் மோதி விபத்து, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
ஊத்துக்குளி அருகே சாலை தடுப்பில் கார் மோதி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஊத்துக்குளி,
திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர் பிரித்விராஜ் (வயது 21). இவர் கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே வகுப்பில் இவர்களுடைய நண்பர்களான கடலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (21), சேலத்தை சேர்ந்த அரவிந்த் (20), திருப்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (21), ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (20), திருப்பூரை சேர்ந்த யுகப்பிரியன் (20), திருச்சியை சேர்ந்த சிவாஜி (21) மற்றும் கேரளாவை சேர்ந்த சாகர் (21) ஆகியோர் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரவிந்த் உறவினர் திருமணம் சேலத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இவர்கள் அனைவரும் ஒரு காரில் சென்றனர். பின்னர் திருமணம் முடிந்து அனைவரும் கோவை திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை சந்தோஷ்குமார் ஓட்டினார்.
இந்த கார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளியை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைதடுப்பில் பங்கரமாக மோதியது. பின்னர் அந்த கார் சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு, எதிர்புறத்தில் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பிரித்விராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த கிருஷ்ணகுமார், சந்தோஷ்குமார், அரவிந்த், கார்த்திகேயன், யுகப்பிரியன், சிவாஜி மற்றும் சாகர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் கிருஷ்ணகுமாரும் பலியானார். மற்ற 6 பேரும் திருப்பூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.