சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி, தொழிலாளி தலை நசுங்கி பலி மனைவி படுகாயம்

சாத்தான்குளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதிய விபத்தில் தொழிலாளி தலை நசுங்கி பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

Update: 2019-03-14 22:00 GMT
சாத்தான்குளம்,

நெல்லை மாவட்டம் இட்டமொழி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜக்கம்மாள் (47). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று மாலையில் தங்கராஜ் தன்னுடைய மனைவியுடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வந்தபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜின் மீது அந்த வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தலை, காலில் பலத்த காயம் அடைந்த ஜக்கம்மாள் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ஜக்கம்மாளுக்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த தங்கராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இட்டமொழி, சாத்தான்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம்-இட்டமொழி மெயின் ரோட்டில் மின்வாரிய அலுவலகம், யூனியன் அலுவலகம், அரசு கல்லூரி, கல்வியியல் கல்லூரி போன்றவை உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் இந்த சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் 10-க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே அங்கு விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகள், ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கருடன் கூடிய எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்