நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு பகுதியில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, வாகன சோதனை - ஆணையர்கள் நடவடிக்கை

நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் ஆணையர்கள் தலைமையில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. போலீசாரும் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

Update: 2019-03-12 23:15 GMT
வில்லியனூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. அந்த விதிகளின்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் விளம்பர பேனர்கள் மற்றும் நோட்டீசுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளிலும் அதுபோல் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் தலைமையில் ஊழியர்கள் மந்தைவெளி பகுதியில் எழுதப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் கருத்தய்யன், இளநிலை பொறியாளர் அகிலன் கலந்து கொண்டனர்.

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட திருக்கனூர், காட்டேரிகுப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆணையர் சீத்தாராமன் தலைமையில் ஊழியர்கள் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டன.

இதே போல் திருக்கனூர் போலீசார் எல்லைப்பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தேர்தல் துறை அதிகாரிகளுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்