நெல்லையில் பா.ம.க. தொழிற்சங்க விழாவுக்கு தடை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு
நெல்லையில் பா.ம.க. தொழிற்சங்க விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பா.ம.க. சார்பில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடத்த நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்காக நெல்லை மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தேவையான ஏற்பாடுகளை செய்தனர். வண்ணார்பேட்டை மேம்பாலத்துக்கு கீழே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேலும் அந்த பகுதியில் கட்சி கொடிகளும் கட்டப்பட்டது. பெயர் பலகை திறப்பதற்கு தயார் நிலையில் நிறுவப்பட்டு இருந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை பறக்கும் படை தாசில்தார் மோகன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வண்ணார்பேட்டைக்கு விரைந்து சென்றனர். பா.ம.க. நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கட்சி நிகழ்ச்சிகள் நடத்த முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனவே பெயர் பலகை திறக்க கூடாது, உடனடியாக கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே அனுமதி பெற்றுத்தான் விழா நடத்துகிறோம் என்றனர். ஆனால் முந்தைய அனுமதிகள் செல்லாது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால், தேர்தல் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றுத்தான் நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் உத்தரவை ஏற்று விழாவை ரத்து செய்தனர். கொடிகள் மற்றும் பந்தல்கள் அகற்றப்பட்டது. இதற்கிடையே பெயர் பலகையை மூடி வைத்திருந்த துணியை எடுத்து திறந்து வைத்துவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.