கயத்தாறு அருகே கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் வாக்குச்சாவடி மையம் அமைக்க கோரிக்கை
கயத்தாறு அருகே வாக்குச்சாவடி மையம் அமைக்க கோரி, கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி பஞ்சாயத்தில் மூர்த்தீசுவரபுரம், பெரியசாமிபுரம், பள்ளங்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த 1957-ம் ஆண்டில் இருந்து மூர்த்தீசுவரபுரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருமங்கலகுறிச்சியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரியசாமிபுரத்துக்கு வாக்குச்சாவடி மையம் மாற்றப்பட்டது. அங்கு சென்று வாக்களிக்க மூர்த்தீசுவரபுரம் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பல சமுதாய மக்கள் இணைந்து வாழ்கின்ற மூர்த்தீசுவரபுரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும். இல்லையெனில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, மூர்த்தீசுவரபுரம் கிராம மக்கள் நேற்று தெருக்களிலும், வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் அவர்கள், அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மூர்த்தீசுவரபுரம் கிராம மக்கள், கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சென்று, தாசில்தார் லிங்கராஜிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மூர்த்தீசுவரபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.