இழப்பீட்டு தொகை வழங்காததால் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் முற்றுகை
தேவகோட்டையில் இழப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் கூட்டுறவு வங்கி முன்பு திடீர் முற்றுகையிட்டனர்.
தேவகோட்டை,
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் 13 கிராம குரூப் விவசாயிகள் பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு தொகை கட்டியிருந்தனர். தமிழகத்திலேயே முதன்முதலாக சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொகை பல கிராமங்களில் பாரபட்சமாக வழங்கப்பட்டு இருந்ததால், விவசாயிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விவசாயிகளை தவிர்த்து இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று, அனைத்து கிராமங்களிலும் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து முறைகேடு செய்துள்ளவர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கலெக்டரின் உத்தரவுபடி தேவகோட்டை-கண்டதேவி சாலையிலுள்ள பூசலாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்த விவசாயிகள் திடீரென, வங்கிக்கு வந்து முற்றுகையிட்டு தங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தருமாறு கேட்டனர். ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், உடனடியாக தொகை வழங்க முடியாத நிலை உள்ளது என வங்கியின் தலைவர் தண்ணீர்மலை விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
மேலும் இன்னும் சில தினங்களில் விசாரணை முடிந்து, அரசிடம் உரிய அனுமதி பெற்று உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த முற்றுகையில் ஆனையடி முத்துராமன், மாடக்கோட்டை நாராயணன், கிழவன்குடி ராஜேந்திரன், சாத்தனக்கோட்டை கருப்பையா உள்பட ஏராளமான விவசாய சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.