காங்கிரஸ் சார்பில், மண்டியா தொகுதியில் போட்டியிட நடிகர் சிரஞ்சீவி மூலம் டிக்கெட் கேட்கிறார், சுமலதா

காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதியில் போட்டியிட நடிகர் சிரஞ்சீவி மூலம் சுமலதா அம்பரீஷ் டிக்கெட் கேட்க முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-03-12 22:45 GMT
பெங்களூரு,

நடிகர் அம்பரீஷ், 4 மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவர் காங்கிரசில் இருந்தவர். மத்திய-மாநில மந்திரியாக பணியாற்றியவர். அவரது மனைவியான நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக காங்கிரசில் டிக்கெட் வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.

ஆனால் கூட்டணியில் மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனாலும் மண்டியாவில் டிக்கெட் பெறும் முயற்சியை சுமலதா கைவிடவில்லை.

நடிகை சுமலதா, பிரபல நடிகர் சிரஞ்சீவி மூலம் டிக்கெட் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு, மண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு டிக்கெட் வழங்குமாறு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இதுபற்றி தெரிவித்த மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்படுவதால், அந்த தொகுதியில் டிக்கெட் வழங்க இயலாது என்பதை சுமலதாவிடம் எடுத்துக்கூறி, அவரை சமாதானப்படுத்தும்படி மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.

மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தாலும், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருப்பதாக சுமலதா கூறினார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து வருகிற 18-ந் தேதி தனது முடிவை அறிவிப்பதாக சுமலதா கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்