“சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்யக் கூடாது” கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

கோவில்பட்டியில் சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்யக் கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2019-03-12 22:00 GMT
கோவில்பட்டி,

வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம், கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

கோவில்பட்டி நகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொது சுவர்கள், தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்யக் கூடாது. கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தனியார் சுவர்களில் மட்டும் விளம்பரம் செய்வதற்கு தேர்தல் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று, விளம்பரம் செய்து கொள்ளலாம். பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களை உடனே அகற்ற வேண்டும்.

கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பதாக இருந்தால், தேர்தல் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். கட்சி தேர்தல் அலுவலகத்தை எளிதில் தீப்பற்றக்கூடிய கீற்று கொட்டகையால் அமைக்க கூடாது. சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது.

வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களினாலான பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்க கூடாது. வாகனங்களில் செல்லும்போது ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்பிலான பொருட்களையோ, ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பணத்தையோ எடுத்து செல்ல கூடாது. போலீசார் அனுமதித்த இடங்கள், வழித்தடங்களில்தான் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த வேண்டும்.

தேர்தல் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிகளை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்