பறக்கும்படையினர் வாகன சோதனை: மாணவர்களிடம் ரூ.1 லட்சம் சிக்கியது

தஞ்சை அருகே பறக்கும்படையினர் வாகன சோதனை நடத்தியபோது மாணவர்களிடம் ரூ.1 லட்சம் சிக்கியது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அந்த பணம் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Update: 2019-03-12 22:30 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும்படையினர் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள்.

அதேபோல 8 நிலையான கண்காணிப்பு குழுக்களும், வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் தாசில்தார் அருணகிரி தலைமையிலான பறக்கும்படையினர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள், அந்த வழியாக வந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்திய ஜனநாயக கட்சி கொடி கட்டப்பட்ட கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. காரின் முன்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொடியை கழற்றும்படி கூறினர். இதையடுத்து டிரைவர், காரில் இருந்த கொடியை கழற்றினார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் மீண்டும் காரில் கொடியை கட்டி கொண்டு அவர்கள் சென்றனர்.

அதேபோல மற்றொரு காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த காரில் இருந்த மாணவர்கள் 2 பேரிடம் ரூ.1 லட்சம் சிக்கியது. இது குறித்து மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தனியார் கல்லூரி ஒன்றில் சேருவதற்காக கட்டணமாக செலுத்த பணம் எடுத்து செல்வதாக கூறினர்.

மேலும் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை காட்டியதால் பணத்தை பறிமுதல் செய்யாமல் மாணவர்களிடமே, அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர். இதேபோல தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்