தஞ்சை சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் லாரிகள் உரிமையாளர்கள்-டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை சேமிப்பு கிடங்கில் காத்திருக்கும் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை இறக்கக்கோரி லாரி உரிமையாளர்கள்-டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-12 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல், அறுவடை பணிகளும் முடிவடைந்தது. தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல், மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான இடம் இல்லை என கோரி லாரிகளில் இருந்து நெல் மூட்டைகள் இறக்கப்படவில்லை.

கடந்த 6-ந் தேதி முதல் நெல் மூட்டைகள் இறக்கப்படாததால் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் சேமிப்பு கிடங்கு வளாகத்திலும், தஞ்சை-புதுக்கோட்டை சாலையோரத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல சென்னம்பட்டியில் உள்ள சேமிப்பு கிடங்கில் 80 லாரிகள் நெல் மூட்டைகளுடன் காத்து நிற்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தஞ்சையில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு நேற்று அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை தொழிலாளர்கள் வரிசையாக நிறுத்தி அரிசி மூட்டைகளை இறக்கி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைத்தனர்.

ஆனால் நெல் மூட்டைகளை இறக்காததால் ஆத்திரம் அடைந்த லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், சேமிப்பு கிடங்கின் நுழைவுவாயில் முன்பு லாரியை நிறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெல் மூட்டைகள் இறக்கி வைக்க வேறு இடம் தயார் செய்தவுடன் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகள் இறக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கைவிட்டனர்.

இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, தஞ்சையில் 150 லாரிகளும், சென்னம்பட்டியில் உள்ள சேமிப்பு கிடங்கில் 80 லாரிகளும் நெல் மூட்டைகளுடன் காத்து நிற்கின்றன. இதனால் நாங்கள் இரவு, பகலாக சேமிப்பு கிடங்கிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எங்களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. எனவே நெல் மூட்டைகளை உடனே இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்