கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்து மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-12 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி அருகே உள்ள மேலபனையூர் மற்றும் கோட்டூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதங்களுக்கு மேலாகியும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புயல் நிவாரண தொகை வங்கி கணக்கில் ஏறவில்லை எனக்கூறி நேற்று மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டூர் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கோட்டூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், கிளை செயலாளர்கள் அம்பிகாபதி, சிவக்குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகளை தாசில்தாரிடம் வழங்க சென்றனர். அப்போது போலீசாருக்கும், கிராம பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உரிய நிவாரணம் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்