பழங்குடியின சிறுவர்களுக்கு சீருடை வாங்கி கொடுத்த போலீஸ் அதிகாரி

ஊத்துக்கோட்டை அருகே கிழிந்த ஆடையால் பள்ளி செல்ல மறுத்த பழங்குடியின சிறுவர், சிறுமிகளுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு புதிய சீருடை வழங்கினார். அவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2019-03-12 23:00 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ள இப்பகுதியில் பழங்குடியினர் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் சமீபத்தில் அரசு விழா நடைபெற்றது. இதில் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மட்டும் அங்கு சுற்றிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து விசாரித்தார்.

அவர்களிடம் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை? என்று கேட்டார். அப்போது, ‘பள்ளிக்கு சென்றோம். பள்ளியில் தந்த சீருடைகள் கிழிந்து விட்டன. மாற்று சீருடை இல்லை. முடிவெட்ட கூட வசதி இல்லை’ என்று சிறுவர்கள் தெரிவித்தனர். இதே கருத்தையே 20 சிறுவர், சிறுமிகளும் தெரிவித்தனர்.

உடனே துணை சூப்பிரண்டு சந்திரதாசன், சிறுவர், சிறுமிகளை தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஊத்துக்கோட்டைக்கு வந்தார். தனது சொந்த பணத்தில் அவர்களுக்கு புதிய பள்ளி சீருடைக்கான துணி வாங்கினார். பின்னர் அதை உடனே தைப்பதற்காக தையல்காரர்களை தேடிப்பிடித்து கொடுத்தார்.

போலீஸ் அதிகாரிகள் உதவுவதை பார்த்ததும், தையல் காரர்களும் மற்ற துணிகளை ஒதுக்கி வைத்து விட்டு உடனடியாக சீருடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாணவர்களில் சிலர் முடிவெட்டாமல் இருந்தனர். அவர்களை அருகே உள்ள முடிதிருத்தும் கடைக்கு அழைத்து சென்று முடி வெட்ட ஏற்பாடு செய்தார்.

பின்னர் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் சிறுவர், சிறுமிகளை உணவகத்துக்கு அழைத்து சென்று உணவு பரிமாறினார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதற்குள் புதிய பள்ளி சீருடை தயாராகிவிட்டது. அதனை அனைவருக்கும் அவர் வழங்கினார்.

பின்னர் அவர்களிடம், ‘பள்ளிக்கு சென்று படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்’ என்று துணை சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார். அவருக்கு சிறுவர், சிறுமிகள் நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரையும் போலீஸ் வாகனத்திலேயே திம்மபூபாலபுரம் கிராமத்துக்கு அனுப்பிவைத்தார்.

புதிய சீருடை கிடைத்த மகிழ்ச்சியிலும், பள்ளிக்கு செல்லும் உற்சாகத்திலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனின் இந்த மனிதநேய பணியை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். அப்போது இன்ஸ்பெக்டர் மதியழகன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டுகள் சங்கர், செந்தில், சிவா, தொண்டு நிறுவன சமூக ஆர்வலர் தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்