தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து - எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2019-03-11 23:28 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக வழங்குவார்கள்.

இந்தநிலையில் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் தேர்தல் தேதியை அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் குறைதீர்வு கூட்டம் மற்றும் அரசு நலத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. நேற்று நடக்க இருந்த மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறவில்லை.

இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அறியாத மக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள தகவலையும், தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் கூறினர். இதனால் அவர்கள் மனு அளிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அரக்கோணம், திருப்பத்தூர், ஏலகிரி, சோளிங்கர் போன்ற பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து எடுத்துக்கூறினர். ஆனால் அவர்கள் நாங்கள் தொலைவில் இருந்து வந்திருக்கிறோம். மனு கொடுத்து விட்டு செல்கிறோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நுழைவு வாசலில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டதை பொதுமக்களிடம் போலீசார் காண்பித்தனர். அதை வாசித்து பின்னர் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்படாது. எனவே வேலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைக்க வந்தனர். அப்போது அலுவலகத்தில் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சில பொருட்கள் இருந்ததால் அதை எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கூறினர். இதையடுத்து அந்த பொருட்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் இருந்த கட்சி தலைவர்கள் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் போலீசார் மாவட்ட எல்லையில் சோதனை செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.

மேலும் செய்திகள்