கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பயிர் காப்பீடு தொகை வழங்க கோரிக்கை
பயிர் காப்பீடுதொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடாக, விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடுதொகை வழங்க வேண்டும். படர்ந்தபுளி பிர்காவில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு தொகை வழங்காமல் விடுபட்டவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் பரிந்துரைப்படி, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏரி, கண்மாய், குளம் போன்றவற்றை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.
மாவட்ட செயலாளர் நல்லையா நல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தாலுகா செயலாளர்கள் லெனின்குமார் (கோவில்பட்டி), கிருஷ்ணமூர்த்தி (எட்டயபுரம்), அசோக்குமார் (ஓட்டப்பிடாரம்), வேலாயுதம் (விளாத்திகுளம்), தாலுகா தலைவர்கள் சிவராமன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.