தூத்துக்குடி தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேச்சு
தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகர பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் யாரை சுட்டிக் காட்டுகிறார்களோ அந்த வெற்றி வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம், ஆடம்பரமின்றி தேர்தல் பிரசாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். நானே நேரில் வந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக கட்சி காரர்களை சந்தித்து தேர்தல் பணிகளை தொய்வின்றி நடைபெற செய்வேன். அதற்கான தேர்தல் பூத் கமிட்டிகள் ஒன்றியம் நகரம் பேரூராட்சி மாநகர பகுதிகள் வாரியாக உடனடியாக அமைத்து தேர்தல் களப்பணியை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தேசம் காக்க, எதிரிகளின் வேஷம் போக்க அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளரை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக இன்றே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தொலைபேசி ஆலோசனைகுழு உறுப்பினர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகநயினார்(ஸ்ரீவைகுண்டம்), ராமச்சந்திரன்(திருச்செந்தூர்), செம்பூர் ராஜநாராயணன்(ஆழ்வார்திருநகரி), சவுந்தரபாண்டி(சாத்தான்குளம்), உள்பட பலர் கலந்து கொண்டனர்.