உசிலம்பட்டியில் விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சினை கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்
உசிலம்பட்டியில் பொதுமக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வருகிறது. கண்மாய், ஊருணிகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. கிணறு, ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டன. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு சார்பில் இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. சுமார் 1,000 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் தண்ணீர் கிடைக்கவில்லை.
பருவமழையை நம்பியே இந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பருவமழையும் ஏமாற்றியதால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தற்போது உயிர் வாழ்வதற்கு தேவையான குடிநீரும் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இங்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டால், தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெருமாள்பட்டி, கல்யாணிபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் குடிநீர் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்யாணிபட்டி கிராம மக்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று பெருமாள்பட்டியில் மக்கள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் செய்தனர். நேற்று கிராம மக்கள் ஊருக்குள்ளேயே கருப்புக்கொடி ஏந்தி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதேபோன்று உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது, ஆண்டிபட்டி-சேடபட்டி வைகை கூட்டுக்குடிநீர் திட்டம். இதன்மூலம் வழங்கப்படும் குடிநீர் மற்றும் அந்தந்த கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் வழங்கப்பட்டு வந்த குடிநீர் மூலம் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் ஓரளவு சமாளித்து வந்தது. ஆனால் தற்போது ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் மக்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவை வழக்கத்தை விட கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.