கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; கோழிக்கடை ஊழியர் பலி போலீசார் விசாரணை

மணவாளக்குறிச்சி அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கோழிக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-11 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே மங்கலகுன்று திருஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின்ராஜ் (வயது 26). நாகர்கோவிலில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தினமும் அதிகாலையில் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் கோழிகளை இறக்கி விட்டு ஊழியர்கள் வருவார்கள். தொடர்ந்து காலை 10 மணிக்கு கோழி இறக்கிய கடைகளுக்கு சென்று ஜோஸ்பின்ராஜ் பணம் வசூல் செய்து வருவது வழக்கம்.

நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் ஜோஸ்பின்ராஜ் பணம் வசூல் செய்ய மோட்டார்சைக்கிளில் சென்றார். மணவாளக்குறிச்சி அம்மாண்டிவிளை பகுதியில் பணம் வசூல் செய்து விட்டு நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். கட்டைக்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது முன்னால் சென்ற பஸ்சை ஜோஸ்பின்ராஜ் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிரே வந்த கார் மீது மோட்டார்சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸ்பின்ராஜ் அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோஸ்பின்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்