சின்னசேலத்தில், ஓட்டலில் ரூ.1 லட்சம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சின்னசேலத்தில் ஓட்டலில் ரூ.1½ லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 54). இவரது மனைவி மல்லிகா. அன்பழகன் சின்னசேலத்தில் சேலம் மெயின்ரோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 9-ந் தேதி ஓட்டலில் வியாபாரம் முடிந்ததும், அன்பழகன் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் ஓட்டலை திறக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை மல்லிகா, ஊழியர்களுடன் ஓட்டலை திறக்க சென்றார். அப்போது ஓட்டலின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு பதறிய மல்லிகா ஓட்டலின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது ஓட்டலில் இருந்த கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அன்பழகனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஓட்டலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நேற்று முன்தினம் அன்பழகன் ஓட்டலை திறக்காததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில், ஓட்டலின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சத்தை திருடிக்கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள், ஓட்டலில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.