மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து: கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு சென்ற பொதுமக்கள்
நெல்லையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.
நெல்லை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. அரசு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் ரத்து செய்யப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மனுக்களை போடுவதற்கு வசதியாக கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வழக்கம் போல் கூட்டம் வந்தது. நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்று கொண்டு இருந்த போலீசார் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போடும்படி கூறினர். பொதுமக்களும் வரிசையில் நின்று மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.
ஏர்வாடி, பணகுடி, நாங்குநேரி, சுரண்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குவிந்தனர். அவர்கள் மத்திய அரசு திட்டத்தில் மானியத்துடன் ரூ.1 லட்சம் சிறு வணிக கடன் வழங்க வேண்டும் என்று தனித்தனியாக மனு எழுதி பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.
நெல்லையை அடுத்த மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து பெட்டியில் மனுவை போட்டனர். அவர்கள் கூறும்போது, மகாத்மாகாந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 6 மாதமாக வேலை செய்தோம். எங்களுக்கு கூலி வழங்கவில்லை. கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.