ஆவடியில் நாய்க்குட்டியை அடித்துக்கொன்றவர் கைது கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்

ஆவடியில் நாய்க்குட்டியை அடித்துக்கொன்றவர் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்.

Update: 2019-03-11 22:00 GMT
ஆவடி,

ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது வீட்டின் முன்புறம் திடீரென நாய்க்குட்டியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்றை, ஒருவர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் அந்த நாய் ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பால்ராஜ், தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அந்த நாய்க்குட்டியை அடித்துக்கொலை செய்தது, அதே பகுதி 9-வது தெருவை சேர்ந்த ராமு (வயது 50) என்பது தெரிந்தது. இதுபற்றி சென்னை வேளச்சேரியில் உள்ள புளூ கிராஸ் அமைப்பினருக்கு பால்ராஜ் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து புளூ கிராஸ் பொதுமேலாளர் டான் வில்லியம் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நாய்க்குட்டியின் உடலை மீட்டு வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்