திருட்டு நகையை வாங்கியதாக கடலூர் அடகு கடைக்காரரிடம் விசாரிக்க வந்த தஞ்சை போலீசார் - எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பி சென்றனர்
திருட்டு நகையை வாங்கியதாக கடலூர் அடகு கடைக்காரரிடம் தஞ்சை போலீசார் விசாரணை நடத்த வந்தனர். இதற்கு அடகு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் திரும்பி சென்றனர்.
கடலூர்,
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள நகைக்கடையில் கடந்த ஜனவரி மாதம் 40 பவுன் நகை திருடு போனது. இது பற்றி அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் திருடு போன நகையை பண்ருட்டியை சேர்ந்த வியாபாரியிடம் விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையிலான போலீசார் பண்ருட்டி வந்து, அந்த வியாபாரியை பிடித்து விசாரித்தனர். அவர் கடலூர் அடகு கடைக்காரரிடம் அந்த நகைகளை விற்பனை செய்ததாக கூறினார்.
இதன்படி அதிராம்பட்டினம் போலீசார் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அடகு கடைக்காரர் வீட்டுக்கு விசாரணை நடத்த வந்தனர். ஆனால் அவர் நான் திருட்டு நகைகள் எதுவும் வாங்க வில்லை என்று தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக கடலூர் நகர அடகு கடைக்காரர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவரிடமும் அடகு கடைக்காரர்கள் அவர் திருட்டு நகைகள் எதுவும் வாங்கவில்லை என்று கூறினர். இதையடுத்து அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்த முடியாமல் தஞ்சை போலீசார் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.