சாலைகிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

சாலைகிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Update: 2019-03-10 21:56 GMT

மானாமதுரை,

இளையான்குடியை அடுத்த சாலைகிராமத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்பு மனுக்கள் மீதான ஆய்வு நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:– தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் கிராம பகுதியில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்துறை அதிகாரிகளும் கிராம பகுதிக்கு நேரில் சென்று, அங்கு மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அமைச்சர் என்று முறையில் நானும், நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். வேளாண்மைத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விடுப்பட்ட அனைவருக்கும் உரிய காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் அரசின் திட்டங்களை பெறுவதில் அக்கறை காட்டி, பயன்பெற வேண்டும்.

வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. மத்திய அரசும் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. மேலும் நலிவுற்ற தொழிலாளர்கள் 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஒய்வூதியம் பெறுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மகளிர்திட்டம் மூலம் 63 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனங்களும், 14 சுய உதவி குழுக்களுக்கு நிதிக்கடன்களும், 2 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரமும், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்ட 102 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 86 ஆயிரத்து 25 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இதில் இளையான்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாரதிராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன், பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் ரத்தினம், ஒன்றிய அவைத்தலைவர் ரெத்தினம், ஒன்றியகுழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், குமாரக்குறிச்சி காரிச்சாமி உள்பட அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்