காங்கிரஸ் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு

காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-03-10 22:30 GMT
பெங்களூரு, 

காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 தொகுதிகள் வேண்டும்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி மூலம் எதிர்கொள்வது என்று கடந்த 2018-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா வலியுறுத்தினார்.

இதுகுறித்து கர்நாடக அளவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

அவ்வளவு தொகுதிகளை ஒதுக்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லியில் தேவேகவுடா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேவேகவுடா வலியுறுத்தினார்.

உடன்பாடு எட்டப்படவில்லை

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிைவ தெரிவிப்பதாக ராகுல் காந்தி கூறிவிட்டு திரும்பினார். இதனால் அந்த பேச்சுவார்த்தையிலும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

10-ந் தேதிக்குள் (நேற்று) தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்தனர். ஆனால் அதன்படி தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று காங்கிரஸ் சொல்கிறது.

இழுபறி நிலை

10 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனதா தளம்(எஸ்) உறுதியாக உள்ளது. இதனால் கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இறுதியாக ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் மைசூரு, துமகூரு, சிக்பள்ளாப்பூர், உடுப்பி, சிக்கமகளூரு ஆகிய தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்