புதுவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுவையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 5 வயதிற்கு உள்பட்ட 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக புதுவையில் 333, காரைக்காலில் 79, மாகியில் 18, ஏனாமில் 22 என மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நெல்லித்தோப்பு மணிமேகலை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். நேற்று காலை 7 மணிமுதல் மாலை 3 மணிவரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், மாநில எல்லைகளிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நேற்று போலியோ சொட்டு மருந்து உட்கொள்ளாத குழந்தைகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும்.