தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்(படம்) கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

Update: 2019-03-10 22:00 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணல் சிற்பத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தேர்தல் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகர் கடற்கரை பகுதியில் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்கள் அனைவரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மணல் சிற்பம் தேர்தல் நாள் வரை இருக்கும். இதனை பார்த்து பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து வாக்குப்பதிவு செய்யவேண்டும்.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் வாக்குப்பதிவு குறித்து ரங்கோலி உள்ளிட்டபல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நரிக்குறவர் வாழும் இடங்களில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வி.பி.ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்