ரூ.175 கோடிக்கு பிணைய பத்திரங்கள் ஏலம்; புதுச்சேரி அரசு முடிவு

ரூ.175 கோடிக்கு பிணைய பத்திரங்களை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2019-03-09 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை அரசின் நிதித்துறை செயலாளர் கந்தவேலு விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு ரூ.175 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுகால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இவை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம், அதன்பின் 10 ஆயிரத்தின் மடங்குகளில் ஏலம் விடப்படும். ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் வருகிற 12-ந்தேதி இந்த ஏலத்தை நடத்தும்.

ஆர்வமுள்ள நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்புநிதி நிறுவனங்கள் முதலியன ஒரு கூட்டு போட்டியில்லா ஏலத்தை மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதள முகவரியில் (www.rbi.org.in) வருகிற 12-ந்தேதி முற்பகல் 10.30 மணிமுதல் 11.30க்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

ஏலத்தின் முடிவுகள் ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய இணையதள முகவரியில் வெளியிடப்படும். ஏலம் கிடைக்கப்பெற்றவர்கள் தங்களது ஏலத்தில் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசர்வ் வங்கி மும்பை அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை 13-ந்தேதி வங்கிப்பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக்கூடிய விகிதத்தில் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை அதாவது செப் டம்பர் 13 மற்றும் மார்ச் 13-ந் தேதிகளில் வழங்கப்படும். பிணைய பத்திரங்கள் மாற்றி கொடுக்கத்தக்க தகுதியுடையதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்