தேவேகவுடா பற்றி ஈசுவரப்பா சர்ச்சை பேச்சு ‘28 மகன்கள் இருந்திருந்தால், அவர்களே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டிருப்பார்கள்’

தேவேகவுடாவுக்கு 28 மகன்கள் இருந்திருந்தால் அவா்களே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டிருப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஈசுவரப்பா பேசியுள்ளார்.

Update: 2019-03-09 23:00 GMT
பாகல்கோட்டை, 

தேவேகவுடாவுக்கு 28 மகன்கள் இருந்திருந்தால் அவா்களே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டிருப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஈசுவரப்பா பேசியுள்ளார்.

பாகல்கோட்டையில் நேற்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் விரோத கூட்டணி ஆட்சி

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. வேட்பாளர் பட்டியல் கூடிய விரைவில் வெளியிடப்படும். மாநிலத்தில் மக்கள் விரோத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. தேவேகவுடா எம்.பி.யாக உள்ளார். அவரது மகன்களான குமாரசாமி முதல்-மந்திரியாகவும், ரேவண்ணா மந்திரியாகவும் உள்ளனர். அவர்கள் 2 பேரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி இருந்தனர். பின்னர் குமாரசாமியின் மனைவி ராமநகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி விட்டார்.

28 மகன்கள் இருந்திருந்தால்...

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேவேகவுடாவின் பேரன்கள் பிரஜ்வல் ரேவண்ணா, நிகில் குமாரசாமி போட்டியிடுகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சி, ஒரு குடும்ப கட்சி என்பதற்கு இதை விட உதாரணம் எதுவும் சொல்ல வேண்டுமா?. தேவேகவுடாவுக்கு 28 மகன்கள் இருந்திருந்தால் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும், அவரது மகன்களே வேட்பாளராக போட்டியிடுவார்கள். ஆனால் தேவேகவுடாவுக்கு 28 மகன்கள் இல்லை. ஒரு வேளை 14 மகன்கள் இருந்திருந்தால், 14 மகன்கள், அவர்களது மனைவிகள் என 28 பேரும், 28 தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். நான் தேவேகவுடாவை தவறாக சொல்லவில்ைல. குடும்ப ஆட்சிக்கு ஒரு உதாரணத்தை சொன்னேன்.

எடியூரப்பா மகன், சித்தராமையா மகன் அரசியலுக்கு வந்திருப்பதாக அனிதா குமாரசாமி சொல்லி இருக்கிறார். அவர்களது ஒரு மகன் தான் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் தேவேகவுடா குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசியல் வந்து விட்டீர்கள் என்று தான் சொல் கிறேன். மாநில மக்களும் ஜனதாதளம்(எஸ்) ஒரு குடும்ப கட்சி என்று சொல்கின்றனர். சுமலதா குறித்து மந்திரி ரேவண்ணா பேசி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

எதிர்ப்பு

இதற்கிடையில், தேவேகவுடா குறித்து ஈசுவரப்பாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேவேகவுடா குறித்து பேசிய ஈசுவரப்பாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்