டெல்லியில் பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ரூ.2,064 கோடி வழங்க கோரிக்கை

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ரூ.2,064 கோடியை உடனடியாக வழங்கும்படி அவரிடம் குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.

Update: 2019-03-09 23:30 GMT
பெங்களூரு, 

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ரூ.2,064 கோடியை உடனடியாக வழங்கும்படி அவரிடம் குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.

பிரதமருடன் குமாரசாமி சந்திப்பு

கர்நாடகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 2 கட்சிகள் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக முதல்-மந்திரி குமாரசாமி டெல்லியில் முகாமிட்டுள்ளார். அதே நேரத்தில் மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால், அதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்கு முதல்-மந்திரி குமாரசாமி காலஅவகாசம் கேட்டு இருந்தார்.

அதன்படி, நேற்று காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச குமாரசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நேற்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார். அவர்கள் 2 பேரும் அரை மணிநேரம் பேசினார்கள்.

ரூ.2,064 கோடி வழங்க கோரிக்கை

அப்போது பிரதமர் மோடியிடம், மாநிலத்தில் மழை இல்லாததால் 100 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 156 தாலுகாக்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக ரூ.11,384 கோடி மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்து உள்ளது. இதுவரை மாநிலத்தில் 188 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 96 மி.மீட்டர் அளவே மழை பெய்துள்ளது. குடகு மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டது. அதற்கு மத்திய அரசு போதுமான நிதியை கர்நாடகத்திற்கு வழங்கவில்லை.

தற்போது மாநிலத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ரூ.386 கோடியை ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரின் சிபாரிசுபடி கர்நாடகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. இதனால் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே வறட்சி நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,064 கோடியை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை வைத்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்