நெல்லை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,027 வழக்குகளுக்கு தீர்வு

நெல்லை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,027 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2019-03-09 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கோர்ட்டில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று காலையில் தொடங்கியது. மாநில சட்டப்பணி ஆணைக்குழு தலைவரும், நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியுமான ராஜசேகர் தொடங்கி வைத்தார்.

முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி அருள்முருகன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயராஜ், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர், தலைமை குற்றவியல் நீதிபதி ராஜமாணிக்கம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ஹேமானந்த குமார், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தனஜெயன், 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா மற்றும் நீதித்துறை நடுவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு, நிலம் தொடர்பான வழக்கு, ஜீவனாம்சம் வழக்கு, விவாகரத்து வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதேபோல் தென்காசி, அம்பை, சங்கரன்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, செங்கோட்டை, சேரன்மாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 4 ஆயிரத்து 129 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2 ஆயிரத்து 27 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.14 கோடியே 1 லட்சத்து 93 ஆயிரத்து 272 இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 727 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டதில் 1,960 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.13 கோடியே 40 லட்சத்து 10 ஆயிரத்து 178 இழப்பீடாக வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுதவிர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளான வங்கி கடன் வழக்குகள் 1,402 எடுத்துக்கொள்ளப்பட்டு, 67 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. ரூ.61 லட்சத்து 83 ஆயிரத்து 94 இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்