நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் திருட்டு 3 பேர் கைது
நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி கணேசபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது41). லாரி அதிபர். இவர் நேற்று முன்தினம் லாரி டிரைவருக்கு பணம் கொடுப்பதற்காக வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் நாமக்கல் வந்து உள்ளார். இங்கு தனியார் வங்கி ஒன்றில் தனது கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்து கொண்டு மொத்தம் ரூ.90 ஆயிரத்தை மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்து கொண்டு திருச்செங்கோடு சாலையில் உள்ள வடிவேல் என்பவருக்கு சொந்தமான மண்டிக்கு சென்று உள்ளார்.
அங்கு மோட்டார் சைக்கிளை மண்டி முன்பு நிறுத்தி விட்டு கடலை பருப்பு வாங்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை 2 பேர் திருடினர்.இதை கண்டு அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து இருவரையும் பிடித்து நாமக்கல் போலீசில் ஒப்படைத்தனர். இதேபோல் அங்கு தயார் நிலையில் தப்பித்து செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த நபரையும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (25), வேல் என்கிற வேல்முருகன் (38), சரவணன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரத்தை மீட்ட போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் 3 பேர் மீதும் பொதுமக்களை திசைதிருப்பி திருடும் வழக்குகள் திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். நாமக்கல்லில் வங்கிக்கு செல்லும் நபர்களை குறி வைத்து சிலர் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வங்கிக்கு செல்லும் பொதுமக்கள் பணத்தை எடுத்து இருசக்கர வாகனங்களில் வைத்தால், தேவை இல்லாத இடங்களில் வாகனத்தை நிறுத்த கூடாது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.