குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு: பொக்லின் எந்திரம், லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மெலட்டூரில் குளத்தில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரம், லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-09 22:00 GMT
மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் மேலக்குளம் உள்ளது. மெலட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தில் நேற்று சிலர் பொக்லின் எந்திரம் மூலம் மண் எடுத்துக்கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மண் எடுக்க பயன்படுத்திய பொக்லின் எந்திரம் மற்றும் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மண் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தூர்வாருவதாக கூறி மெலட்டூர் மேலக்குளத்தில் இருந்த வண்டல் மண் முழுவதையும் அள்ளி சென்று விட்டனர். இதனால் குளத்தில் தண்ணீர் தேங்குவது இல்லை. முன்பெல்லாம் கோடை காலத்தில் கூட இந்த குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது ஜனவரி மாதமே குளம் வறண்டு விடுகிறது.

இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகிறது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது சுருங்கி விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளத்தில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

பொதுமக்களின் திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்