குத்தாலம் அருகே தென்னந்தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை

குத்தாலம் அருகே தென்னந்தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-09 22:15 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 70). இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 20-ந் தேதி கலியமூர்த்தி, தனது மருமகள் உமாமகேஸ்வரியிடம் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து பல இடங்களில் தேடியும் கலியமூர்த்தி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கலியமூர்த்தி வீட்டின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தென்னந்தோப்பில் துர்நாற்றம் வீசியது. அப்போது அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது கலியமூர்த்தி பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் குத்தாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்