சீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் கைது

சீர்காழியில், தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானர்கள் ஆவர்.

Update: 2019-03-09 23:15 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி சங்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(வயது 47). இவர் ஒப்பந்தக்காரர் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். கடந்த 23.8.2018 அன்று சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சீர்காழி அருகே புதுத்துறை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன்(29), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகன் கட்டைபிரபு என்கிற அருண்பிரபு(34) உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த பார்த்திபன், அருண்பிரபு ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர்.

இந்த நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள பஸ் அதிபர்கள், தொழிலதிபர்கள், மணல் குவாரி அதிபர்கள், முக்கிய வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோரை போனில் தொடர்பு கொண்ட பார்த்திபன், ரமேஷ்பாபுவை கொலை செய்த பார்த்திபன் பேசுகிறேன். எனக்கு உடனடியாக பணம் தர வேண்டும் என்று கூறி, பார்த்திபன் கொலைமிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது போனை எடுக்காதவர்களை பார்த்திபனின் ஆதரவாளர்கள் நேரில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாலி கிராமத்தை சேர்ந்த அன்புமாயவன்(26), செல்வபருதி(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார், தலைமறைவான பார்த்திபன், அருண்பிரபு ஆகிய 2 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சீர்காழி சட்டநாதபுரம் உப்பனாற்று பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் போலீசாரை கண்டதும் பாலத்தில் திடீரென நின்றது. இதனையடுத்து காரில் இருந்த 2 பேர் பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயற்சித்தனர். இதில் 2 பேருக்கும் கால் முறிந்து படுகாயம் அடைந்தனர்.

உடனே 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் 2 பேரும் போலீசாரால் தேடப்பட்ட பார்த்திபன், கட்டைபிரபு என்கிற அருண்பிரபு என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர் கைது செய்யப்பட்ட பார்த்திபன் மீது நாகை, சேலம், சென்னை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்