பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை,
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களை அறையில் இருந்து தினந்தோறும் காலை 6 மணிக்கு திறந்து விட்டு, பின்னர் மாலை 6 மணிக்கு அடைப்பது வழக்கம்.
சிறை வளாகத்தில் பீடி, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சாம்சன் மேற்பார்வையில் பாளையங்கோட்டை உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர். குளியலறை, கைதிகள் அறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 7.30 மணி வரை நடந்தது. அப்போது சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்றும், இது மாதந்தோறும் நடைபெறும் வழக்கமான சோதனைதான் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.