வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

பொள்ளாச்சி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.

Update: 2019-03-09 21:45 GMT
பொள்ளாச்சி,

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உலாந்தி, உடுமலை, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி ஆகிய 6 வனச்சரகங்களை கொண்டது. இங்கு யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி, புலி, சிங்கவால் குரங்கு மற்றும் அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து விட்டன. வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து விட்டது. எப்போதும் பசுமையாக காணப்படும் பொள்ளாச்சி வனப்பகுதியில் உள்ள மரங்களில் இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சி அளிக்கின்றன.

நீரோடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதாலும், வறட்சியின் காரணமாக போதிய உணவு கிடைக் காமலும் யானை, மான் உள்பட வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி படையெடுகின்றன. இதனால் அடிக்கடி சேத்துமடை, ஆழியாறு பகுதிகளில் குடியிருப்புகள், தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன. இதை தடுக்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனவர்கள் பிரபாகரன், முருகேசன் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் டிராக்டர், லாரி மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வறட்சி காரணமாக வனவிலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதிகளை விட்டு வெளியே வருகின்றன. இதன் காரணமாக வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தடுப்பணைகள், தொட்டிகளில் தண்ணீர் காலியானதும் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டுநிரப்பும் பணி தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக வாரத்திற்கு இருமுறை 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுன்றது. இதற்காக வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஆய்வு செய்து தொட்டிகளில் தண்ணீர் காலியானதும், மீண்டும் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்