நெல்லையில் வெயிலுக்கு ஒருவர் பலி
நெல்லையில் வெயிலுக்கு ஒருவர் சுருண்டு விழுந்து பலியானார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று 103 டிகிரி வெப்ப நிலையையும் தாண்டி வெயில் தனது கோர முகத்தை காட்டியது.
ரோட்டில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்றும் வீசியது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க மதிய நேரத்தில் பெரும்பாலானோர் பயணங்களை தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் நேற்று அடித்த வெயிலுக்கு தொழிலாளி ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கூடுதலாக கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு தொழிலாளி நேற்று பிற்பகலில் இறந்து கிடந்தார். இதைக்கண்ட கல்லூரி நிர்வாகம் சார்பில் உடனடியாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் மதியம் நேர வேலையில் ஈடுபட்டிருந்தபோது வெயிலின் கொடுமையால் சுருண்டு விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பின்னர் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.