கோவை வேடப்பட்டியில் பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து
வேடப்பட்டியில் பஞ்சு மெத்தை தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
வடவள்ளி,
கோவை வேடப்பட்டி- பேரூர் சாலையில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான பஞ்சு மெத்தை தயாரிக்கும் குடோன் உள்ளது. இதனை ஒட்டி அவரது வீடு உள்ளது. இந்த குடோனில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு மெத்தைகள், தலையணைகள் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 3 மணியளவில் பஞ்சு மெத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் வைத்திருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் குடோன் உரிமையாளர் சுப்பிரமணியம் வெளியே வந்தார். அவர் குடோன் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு தங்கி இருந்த ஊழியர்களை எழுப்பினார். அவர்கள் உடனடியாக எழுந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ மளமளவென்று பரவ தொடங்கியது.
இதற்கிடையே குடோன் வளாகத்தில் பஞ்சு மெத்தை ஏற்றி வைத்திருந்த 4 வேன்களிலும் தீபரவியது. இது குறித்து தெற்கு கோட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை, கவுண்டம்பாளையம், பீளமேடு பகுதிகளில் இருந்து 3 வண்டிகளில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. சுமார் 6.30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்து குறித்து வடவள்ளி போலீசார் கூறியதாவது:-
பஞ்சு மெத்தை தயாரிக்கும் குடோனில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதில் மெத்தை தயாரிக்கும் எந்திரங்கள் மற்றும் பஞ்சு பொருட்கள் ஆகியவை தீயில் எரிந்து சாம்பலாயின. இந்த குடோனில் இருந்து 4 வேன்களில் பஞ்சு மெத்தை ஏற்றி டெலிவரிக்கு அனுப்புவதற்காக குடோன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வேன்களும், அதில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த மெத்தைகளும் தீயில் எரிந்து நாசமானது. மேலும், கட்டிடமும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.