ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊத்தங்கரை ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும். 100 நாள் வேலை முறையாக வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மூன்றம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், நகர செயலாளர் பாபுசிவக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி அமானுல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிசெல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரேசன், தொழில் அதிபர் மதியழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. கூறுகையில், ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளிலும் தண்ணீர் பிரச்சினை உள்ளது. குறிப்பாக மூன்றம்பட்டி தளபதி நகரில் இருளர் இனமக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். தளபதி நகருக்கு வளர்ச்சி பணிக்கு ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர். இதை கண்டித்து விரைவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.