திருவாரூரில் 250 பேருக்கு ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
திருவாரூரில் 250 பேருக்கு ரூ.4½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின்கீழ் வேளாண் எந்திரங்கள் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். கே.கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 250 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 65 லட்சத்து 3 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறுவை தொகுப்பு திட்டம், உழவுக்கு மானியம் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் தினத்தன்று சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்குவதில் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன்.
கூட்டுப்பண்ணையம் திட்டத்தின்கீழ் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதி அளித்து பண்ணை கருவிகள் வாங்கி குழுவிலுள்ள 100 விவசாயிகளையும் கூட்டமாக உபயோகித்து கொள்ள வகை செய்துள்ளது. இதன் மூலம் செலவை குறைத்து வருவாயை அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சிவக்குமார், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கலியபெருமாள், தஞ்சை கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் அன்பு, துணைத்தலைவர் நாராயணசாமி, முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.