கூடலூர் அருகே, பளியன்குடி வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ - நூற்றுக்கணக்கான மரங்கள் நாசம்

கூடலூர் அருகே பளியன்குடி வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளன.

Update: 2019-03-08 22:45 GMT
கூடலூர்,

கம்பம் கிழக்கு வனப்பகுதியான சுருளிப்பட்டி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மரங்களும், அபூர்வ மூலிகைச் செடிகளும் எரிந்து நாசம் அடைந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் கூடலூர் வனச்சரகம் பளியன்குடி வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கூடலூர் பகுதியில் இருந்து பார்க்கும் போது இந்த தீ முதலில் சிறிய தீபம் போன்று தோற்றமளித்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல தீப்பற்றி எரியும் பரப்பளவு அதிகரித்துக் கொண்டே சென்றது. தொடர்ந்து மளமளவென பரவிய இந்த காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தது.

அதையொட்டி நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன. மேலும் இந்த வனப்பகுதியில் ஏராளமான அபூர்வ மூலிகைகளும் உள்ளன. இந்த மூலிகை செடிகளும் தீ விபத்தில் நாசம் அடைந்தன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

இதையடுத்து கூடலூர் வனச்சரகர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இரவில் அங்குள்ள யானைஎச்சம் பகுதியில் தீ கங்குகள் புற்களில் பரவி மீண்டும் தீப்பிடிக்க தொடங்கியது. இந்த தீ காற்றில் பரவி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபம் பின்புறம் உள்ள மலைப்பகுதி மற்றும் கூடலூர் வனத்துறை அலுவலகம் ஒட்டிய மலைப்பகுதி வரை எரிந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். கோடைகாலம் தொடங்கி உள்ளதால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்