வாய்மேடு அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீவைப்பு தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது

வாய்மேடு அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீவைத்த தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-08 22:45 GMT
வாய்மேடு, 

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கோபாலக் கட்டளை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தில்லைக்கண்ணு மகன் செல்வகுமார் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தில்லைக்கண்னு (65), இவருடைய தம்பி தியாகராஜன் (43), மகன் செல்வகுமார் ஆகியோர் ஆறுமுகத்தின் கூரை வீட்டுக்கு தீவைத்து கொளுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். பின்னர் கூரை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி ஜெயலட்சுமி வாய்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தில்லைக்கண்ணு, தியாகராஜன், செல்வகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்