அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் சரத்குமார் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று சரத்குமார் கூறினார்.
சேலம்,
சேலத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். கூட்டணி குறித்து எந்த கட்சியும் எங்களிடம் பேசவில்லை.
தே.மு.தி.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அ.தி.மு.க–பா.ஜனதா அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. ஏனென்றால் கஜா புயலுக்கு வராத பிரதமர் மோடி, தற்போது அரசியலுக்காக 3 முறை தமிழகம் வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்காகவே தமிழகத்திற்கு புதிய திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரிய கட்சிகள் தனித்து போட்டியிட பயப்படுகிறது. பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். மக்கள் தான் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். டி.டி.வி.தினகரன் தனித்து போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. அனைவரும் தனித்து போட்டியிட வேண்டும். தேர்தல் போட்டி என்பது சமமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஆளும்கட்சியை பிரதமர் மோடி தான் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுவதற்கு அ.தி.மு.க–பா.ஜ.க. கூட்டணி வைத்ததன் மூலம் உறுதியாகிறது.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.