‘‘அரசியல் வனவாசத்துக்கு முடிவு கட்ட முதல்-மந்திரி ஆவேன்’’ ஏக்நாத் கட்சே பேச்சு
அரசியல் வனவாசத்துக்கு முடிவு கட்ட முதல்-மந்திரி ஆவேன் என்று ஏக்நாத் கட்சே பேசினார்.
மும்பை,
அரசியல் வனவாசத்துக்கு முடிவு கட்ட முதல்-மந்திரி ஆவேன் என்று ஏக்நாத் கட்சே பேசினார்.
ராஜினாமா செய்தார்
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே, வருவாய் துறை மந்திரியாக பதவி வகித்தார். மந்திரி சபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
இவர் மீது நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு, மனைவி மற்றும் மருமகனுக்கு ஆதரவாக நில முறைகேட்டில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதன் விளைவாக அவர் தனது மந்திரி பதவியை கடந்த 2016-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். இதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.
முதல்-மந்திரி கனவு
இந்தநிலையில் அவர் தனது சொந்த மாவட்டமான ஜல்னாவில் முஸ்லிம் சமுதாயத்தினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “என்னுடைய 40 ஆண்டு கால பொது வாழ்க்கையில் பல துறைகளில் பணியாற்றி உள்ளேன். பல்வேறு துறைகளில் மந்திரி பதவி வகித்துள்ளேன்” என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த முஸ்லிம் தொழிலாளி ஒருவர் குறுக்கிட்டு, ஒருநாள் நீங்கள் மராட்டியத்தின் முதல்-மந்திரி ஆவீர்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஏக்நாத் கட்சே, முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. ஆனால் நான் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன். என்னுடைய அரசியல் வனவாசத்துக்கு முடிவாக ஒருநாள் முதல்-மந்திரி ஆக வேண்டும். இது தான் எனது கனவாகும் என்றார்.