கோவையில், நல வாரிய அலுவலகத்தை அமைப்பு சாரா தொழிலாளர்கள் முற்றுகை
கோவையில் உள்ள நல வாரிய அலுவலகத்தை அமைப்பு சாரா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கோவை,
கோவை மாவட்ட அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள நல வாரிய அலுவலகம் முன் நேற்றுக்காலை கூடினார்கள். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அதிகாரியிடம் மனு அளித்தனர்.
முற்றுகை போராட்டத்திற்கு வெ.கிருஷ்ணசாமி (எல்.பி.எப்.) தலைமை தாங்கினார். இதில், ஜி.மனோகரன்(எச்.எம்.எஸ்.), ஆர்.வேலுசாமி (சி.ஐ.டி.யு.), பாலகிருஷ்ணன் (ஏ.ஐ.டி.யு.சி.), முருகேசன் (பி.எம்.எஸ்.), ஆறுச்சாமி (ஐ.என்.டி.யு.சி.), அழகு (தையல் கலை தொழிலாளர் சங்கம்), ஆறுச்சாமி (எஸ்.என்.டி.யு.சி.) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுடைய ஓய்வூ தியம், இயற்கை மரணம், விபத்து மரணம், திருமணம், மகப்பேறு நிதி உள்ளிட்டவற்றுக்கு விண்ணப் பித்து ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு இதுவரை பண பலன்கள் வழங்கப்பட வில்லை. 2018-19-ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை கோரும் கேட்பு மனுக்களுக்கு இதுவரையிலும் பணபலன்கள் வழங்காமல் முழுமையாக நிலுவையில் உள்ளன. எனவே கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி நடத்தை விதிமுறைகள் அமலாக்கப்பட்டால் 2018-19-ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை கோரும் கேட்பு மனுக்களுக்கு வருகிற ஜூன் மாதம் இறுதி வரை கேட்பு மனு விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள உறுதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே அரசு விரைவில் நிதியை ஒதுக்கி அமைப்புசாரா தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.