ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ.30 லட்சம் செலவில் உணவகம்

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ.30 லட்சம் செலவில் உணவகம் கட்டப்பட உள்ளது.

Update: 2019-03-07 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு போலீசாருக்கு மானிய விலையில் சாப்பாடு, டீ, காபி ஆகியன வழங்கப்படுகிறது. மேலும், பொதுமக்களும் உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உணவகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முன்னிலை வகித்தார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். விழாவில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீசன், முருகசேகர், கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் சொக்காய் தோட்டம் பகுதியில் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கான்கிரீட் சாலை அமைத்தல், கிருஷ்ணம்பாளையத்தில் ரூ.7½ லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ.5 லட்சம் செலவில் ஸ்டோனி பாலம் பராமரித்தல் ஆகிய பணிகளை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர். மேலும், வண்டிப்பேட்டையில் ரூ.3½ லட்சம் செலவிலும், காளியம்மன் கோவில் பகுதியில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவிலும் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளையும் அவர்கள் திறந்து வைத்தனர்.

மேலும் செய்திகள்