மனைவி, குழந்தையை கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
மனைவி, குழந்தையை கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே குடியிருப்பு பகுதி சிவசக்திசெல்வவிநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற அணிலா (வயது 38). கூலித்தொழிலாளியான இவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மீனா என்ற மணிலா (20). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது.
பிரகாஷ் தனது மனைவி மீனாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 4.5.2016 அன்று அதிகாலை 4.30 மணி அளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மீனாவின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தார். மேலும் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்து குழந்தையையும் கொலை செய்தார். இந்த சம்பவம் அப்போது வேலூர் மற்றும் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கு வேலூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி எஸ்.குணசேகரன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் மாற்றுத்திறனாளி என்பதால் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வசதியாக சத்துவாச்சாரியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் மணிமாறனுக்கு சிறப்பு அழைப்பாணை விடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு விசாரணைக்கு வரும் சமயங்களில் ஆசிரியர் மணிமாறனும் கோர்ட்டில் ஆஜராகி, சைகை மூலம் பிரகாசுக்கு விளக்கி விசாரணைக்கு உதவினார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை வாதாடினார். ஆசிரியர் மணிமாறனும் ஆஜராகினார்.
இந்த வழக்கில் நீதிபதி எஸ்.குணசேகரன் தீர்ப்பு கூறினார். அதில், பிரகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மனைவியை கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும், குழந்தையை கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் பிரகாஷை வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். வழக்கு இந்த நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட 11 நாட்களுக்குள் 5 முறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.