அரசு அறிவித்த தேதியில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு அறிவித்த தேதியில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2019-03-07 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி கூட்டுப்பண்ணை முறையில் பண்ணை எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.

விடைத்தாள் திருத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அன்று மாலையே தொகை வழங்கப்பட்டுவிடும். எனவே அரசு அறிவித்த தேதியில் பிளஸ்-2, பிளஸ்-1, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது.

பள்ளிக்கல்வித்துறையை பொருத்தமட்டில் வெறும் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகிறது. எந்த செயல்பாடும் இல்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். திருமணம் ஆனவுடன் குழந்தை பிறந்து விடாது. பள்ளிக்கல்வித்துறையில் ஒவ்வொரு நாளும் பல திட்டங்களை கொண்டு வருகிறோம். அதனுடைய செயல்பாடுகள் வரும் ஆண்டில்தான் தெரியும். பொதுவாக குற்றஞ்சாட்டி பேசக்கூடாது. மேடை போட்டு நான் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று அவர் கூறட்டும். அதே மேடையில் அவருக்கு பதிலளிக்க நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்