கொடைக்கானல், பழனி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - 6 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்

கொடைக்கானல்- பழனி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது. சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிர் தப்பினர்.

Update: 2019-03-07 22:45 GMT
கொடைக்கானல்,

கோவை நேரு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). வியாபாரி. இவர், தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். இதற்காக, கோவையில் இருந்து ஒரு காரில் தனது நண்பர்கள் 5 பேருடன் சதீஷ்குமார் கொடைக்கானலுக்கு புறப்பட்டார். காரை சதீஷ்குமார் ஓட்டினார்.

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. சவரிக்காடு என்னுமிடத்தில் கார் வந்தபோது, எதிரே ஒரு சரக்கு வாகனம் வந்தது. அதற்கு வழி விடுவதற்காக, இடதுபுறமாக சதீஷ்குமார் காரை ஒதுக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென 200 அடி பள்ளத்துக்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் சதீஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காருக்குள் சிக்கிய அவர்கள், தாங்களாகவே மேலே ஏறி மலைப்பாதைக்கு வந்து விட்டனர். விபத்தில் சிக்கிய கார் அங்கேயே நிற்கிறது. அதனை மீட்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்